ஜக்கம்மாள் கோவில் விழாவில் எருது ஓட்டம்: 15 நாள் வழிபாடு!
குளித்தலை: அய்யர்மலை அருகே உள்ள ஜக்கம்மாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு, எருது ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்டம், அய்யர்மலை அருகே உள்ள சிவாயம் பஞ்சாயத்துக்குட்பட்ட குருவிக்காரன்பட்டியில், ஜக்கம்மாள் கோவில் திருவிழா நடந்தது. பேரூர் மந்தை நடுபள்ளத்தில், கம்பளத்து நாயக்கர் சமூகத்தின் குலதெய்வமான ஜக்கம்மாள், பட்டவன், பல்லகுடும்பன் போன்ற தெய்வங்கள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, 15 நாள் காப்பு கட்டி, 14 மந்தையார்களை அழைத்து, இக்கோவில் திருவிழா நடத்தப்படும். மே, 19ம் தேதி, காப்பு கட்டி திருவிழா துவங்கப்பட்டது. விழா துவங்கியதில் இருந்து, 15 நாட்களாக ஜக்கம்மாள் உள்ளிட் ஸ்வாமிகளுக்கு சிறப்ப அபிஷேகம் நடந்தது. உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து அழைப்பு விடுத்த, 14 மந்தையார்களுக்கு விருந்து உபசரிப்பு நடந்தது. மந்தை பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட எருதுகளுக்கு, ஜக்கம்மாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தாரை, தப்பட்டை, உருமி மேளத்துடன் எருதுகள், மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. மாலை தாண்டும் எருதுகளுக்கு, மஞ்சள் தூள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. 14 மந்தையை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட எருதுகள் ஓட்டத்தில் கலந்து கொண்டன. திருச்சி மாவட்டம், வையம்பட்டி புத்தூர் காட்டுநாயக்கர் மந்தையை சேர்ந்த எருது முதலாவதாகவும், எர்ரகாமி நாயக்கர் மந்தையைச் சேர்ந்த எருது இரண்டாவதாக வந்தன. நிகழ்ச்சி நிறைவாக பாரம்பரியமிக்க தேவராட்டம், ஒயிலாட்டத்துடன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். பொங்கல், மாவிளக்கு மற்றும் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது.