உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி விழா!

பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி விழா!

திருப்புத்தூர்: சிவகங்கை, பட்டமங்கலம், தட்சிணா மூர்த்தி கோயிலில், ஜூன் 13ல் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. அன்று மாலை 5:58 க்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு, இடம் பெயர்கிறார். மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்கள், பரிகாரம் காண வேண்டும். சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில், 33 வது என்ற பாடல் பெற்ற திருத்தலம் பட்டமங்கலம். இங்கு, சிவபெருமான், குருவாக அவதரித்து, கார்த்திகை பெண்களுக்கு சாப விமோசனம் அருளியதாக புராண சிறப்பு பெற்றது. யோகத்திற்கும், ஞானத்திற்கும் உரிய கடவுளான தட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கியே அனைத்து கோயில்களிலும் காட்சி தருவார். ஆனால், பட்டமங்கலத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஷ்வரர், அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் மட்டுமே, கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பார். இங்கு குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜூன் 12 ல், மூலவர் வெள்ளி அங்கி அணிந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். சன்னதிக்கு அருகில், உற்சவர் கைலாச வாகனத்தில், கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி அளிக்கிறார். உற்சவருக்கு மட்டும் தொடர்ந்து அர்ச்சனை நடைபெறும். ஜூன்13 ல், பகல் 12:00 மணிக்கு, மூலவர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் கலசபூஜை நடத்துவர். மாலை 5:58க்கு குருப்பெயர்ச்சி ஆன பின், கோயில் ராஜகோபுரம், தட்சிணாமூர்த்தி விமானம், கோபுரம் ஆகியவற்றிற்கு, 7 முக தீபாராதனை காட்டி, புனித கலச நீரால் அபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாட்டுகளை, பரம்பரை அறங்காவலர் ராம.வீரப்பச்செட்டியார் செய்து வருகிறார். விழாவிற்காக, மதுரை, காரைக்குடி, சிவகங்கையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !