நீலகண்டேஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை!
தாராபுரம்: தாராபுரம், தளவாய்பட்டணம், அமராவதி ஆற்றங்கரையில் உள்ள, பழமையான நீலகண்டேஸ்வரர் கோவிலுக்கு, கும்பாபிஷேக விழா நடத்தவேண்டுமென, அறநிலையத்துறைக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாராபுரம்-உடுமலை ரோடு, தளவாய்பட்டணம், அமராவதி ஆற்றங்கரை அருகில், மிகவும் பழமையான, சோழர் காலத்தில் கட்டப்பட்ட, நீலகண்டேஸ்வரர் உடனமர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், போதிய பராமரிப்பு இன்றி, சிதிலமடைந்துள்ளது. சிவன் கோவிலில், தட்சணாமூர்த்தி கிழக்கு பார்த்து அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவில் வெளியே உள்ள நந்தி, முகம் சாய்ந்து இருக்கும். நந்தியில், வலது கண் சுவாமியையும், இடது கண் பக்தர்களை பார்த்தது போன்று காணப்படும். பக்தர்களின் வேண்டுதலை கேட்டு, சிவனிடம் கூறி, பதில் கூறுவதாக, நந்தியின் கண் பார்வைக்கு, பகதர்கள் அர்த்தம் கூறுகின்றனர். இங்கு கிழக்கு பார்த்துள்ள, தட்சணாமூர்த்திக்கு, 16 வாரங்கள் விளக்கு வைத்து வழிபாடு செய்தால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இப்பழமையான, சோழர் காலத்தில் கட்டப்பட்ட, நீலகண்டேஸ்வரர் கோவிலை புனரமைப்பு செய்து, கும்பாபிஷேகம் செய்ய, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.