புதிய ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாதர் உலா!
ஆர்.கே.பேட்டை: நாகவள்ளி உடனுறை நாகேஸ்வர சுவாமி, பிரதோஷ பூஜையில், புதிய ரிஷப வாகனத்தில் உலா வந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய நாகபூண்டியில் உள்ளது நாகவள்ளி உடனுறை நாகேஸ்வர சுவாமி கோவில். இது ராகு, கேது பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. மூலவர் நாகேஸ்வர சுவாமியை, நாகம் பூஜை செய்து வழிபட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது. கோவிலில், நேற்று முன்தினம், பிரதோஷ அபிஷேகம் நடந்தது. நந்திதேவருக்கு மாலை 4:30 மணியளவில், பால், தயிர், இளநீர், சொர்ணம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின், மலர்கள் மற்றும் அருகம்புல் மாலை சாற்றப்பட்டது. தொடர்ந்து பிரதோஷ நாதர், புதிய ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தார். இதில், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் புகழேந்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.