புதுச்சேரி கோவில்களில் மழைநீர் சேகரிக்கப்படுமா..!
தமிழகத்தை பின்பற்றி, புதுச்சேரியில் உள்ள கோவில்கள் மற்றும் குளங்களில், மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 36 ஆயிரத்து 488 கோவில்கள்;56 திருமடங்கள்-அவற்றுடன் இணைந்த கோவில்கள் 58; சமணர் கோவில்கள் 17 மற்றும் அறக்கட்டளைகள் உள்ளன. நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், அனைத்து கோவில்கள், குளங்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும், மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, 4,500 கோவில்கள், அவற்றுக்கு சொந்தமான 1,500 குளங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, அலுவலகம் உள்ளிட்ட, 1,500 இடங்களில், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. தென்மேற்கு பருவ மழை பொழிவை பயன்படுத்தி, மழை நீரை முழுமையாக சேமிப்பதற்கு வசதியாக, வரும் 30ம் தேதிக்குள், மழை நீர் சேகரிப்பு அமைப்பை, கோவில்களில் ஏற்படுத்த, பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
கோவில்களின் தனி அதிகாரிகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துவதற்கான, திட்ட மதிப்பீட்டை தயார் செய்து, இந்து அறநிலையத் துறைக்கு அனுப்பி வருகின்றனர். இதற்கான நிதி ஒதுக்கீடு, உடனுக்குடன் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் 189, காரைக்காலில் 51, ஏனாமில் 3 என, மொத்தம், 243 கோவில்கள், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றை தவிர்த்து, தனியார் கோவில்கள் சிலவும் உள்ளன. புதுச்சேரியிலும் நிலத்தடி நீர் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை நீரை சேமிப்பது, இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை. இதனால், வெள்ளமாக பெருக்கெடுக்கும் மழை நீர், கடலில் கலந்து வீணாகி வருகிறது. குடிநீருக்காகவும், விவசாயத்துக்காகவும், தொழிற்சாலைகளுக்காகவும், நிலத்தடி நீர் சகட்டுமேனிக்கு உறிஞ்சப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரில் கடல் நீர் கலப்பது, தொழிற்சாலைகளின் கழிவு கலப்பது போன்றவையும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.ஒட்டுமொத்தத்தில், மழை நீரை சேகரித்து, நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக்காவிட்டால், எதிர்காலத்தில், புதுச்சேரியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதை தவிர்க்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகத்தை பின்பற்றி, புதுச்சேரியில் உள்ள கோவில்கள், குளங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு, அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.