கதிர்வேல் சுவாமி கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
புதுச்சேரி: கதிர்வேல் சுவாமி கோவிலில், வைகாசி விசாகத் திருவிழா நேற்று நடந்தது. கதிர்காமத்தில் அமைந்துள்ள, கதிர்வேல் சுவாமி கோவிலில், சுப்ரமணியர் அவதார தினமான, வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பால் அபிஷேகம், சங்காபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 7:30 மணிக்கு, 108 சங்கு ஸ்தாபன பூஜை நடந்தது. பின், முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து 108 பால்குடங்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதைதொடர்ந்து, சுவாமிக்கு, 108 பால்குட அபிஷேகம், 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரகார உற்சவமும் நடந்தது. விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, சட்டசபை எதிர்கட்சித் தலைவர் வைத்திலிங்கம், நமச்சிவாயம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, உற்சவதாரர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.