உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தா கோஷம் முழங்க எம்பெருமாள் தேரோட்டம்!

கோவிந்தா கோஷம் முழங்க எம்பெருமாள் தேரோட்டம்!

திருப்பூர் : கோவிந்தா கோஷம் முழங்க, திருப்பூரில் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, கடந்த 5ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி வீதி உலா, சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த 10ம் தேதி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, பூமிநீளாதேவி தாயார், கனகவல்லி தாயார் சமேதரராக ஸ்ரீவீரராகவப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளினார். நேற்று மாலை 4.10 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, கோவிந்தா கோஷம் முழங்க, திருத்தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நிலையிலிருந்த புறப்பட்ட, வீரராகவப் பெருமாள் கோவில் தேர், ஈஸ்வரன் கோவில் வீதி, அரிசிக்கடை வீதி வழியாக வந்தது. காமராஜர் ரோடு, பூ மார்க்கெட் வீதி வழியாக வலம் வந்து, இரவு 7.00 மணிக்கு, நிலையை அடைந்தது. சிறப்பு அலங்காரத்தில், எம்பெருமாளும், தாயார்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 5.00 மணிக்கு, வழக்கமாக, மூலவருக்கு சாய ரட்ஷை பூஜை நடக்கும்; நேற்று, தேரில் எம்பெருமான் எழுந்தருளியதால், 5.30 மணிக்கு, பெருமாள் கோவில் அருகே தேர் வந்ததும், தேரிலேயே சாய ரட்ஷை பூஜை நடந்தது. தேருக்கு முன், சேக்கிழார் புனித பேரவை சார்பில், பெண்கள் கும்மியாட்டம், கோலாட்டம் ஆடி வந்தனர். பக்தர்கள், பெருமாள் பாசுரங்கள் பாடினர். இன்று, மாலை 6.00 மணிக்கு பரிவேட்டை உற்சவம் நடக்கிறது. நாளை மாலை 7.00 மணிக்கு, தெப்பத்திருவிழா, 15ம் தேதி, காலை 10.00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், மகா தரிசனம் நடக்கிறது. 16ம் தேதி காலை 10.00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, மலர் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. 17ம் தேதி மாலை 7.00 மணிக்கு, விடையாற்றி உற்சவத்துடன், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !