ஓசூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஓசூர்: ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.ஓசூரை அடுத்த கெலமங்கலம் பகுதியில், புகழ்பெற்ற வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில், கணபதி, நகரேஸ்வரர், நவக்கிரஹ நாகர் விக்ரகம், ஆஞ்ஜநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில்களில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த, 11ம் தேதி, காலை, 6 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான, மகா கும்பாபிஷேக விழாவை, சேலம் சங்கர சாஸ்திரிகள் தலைமையில், ராஜேஷ் சர்மா, வெங்கடராமசர்மா, வெங்கடராமன் ஆகியோர், சிறப்பு பூஜைகள் செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதையொட்டி, வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.