விழுப்புரம் பிரம்மோற்சவ தேரோட்டம்!
விழுப்புரம் : விழுப்புரம் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், தேரோட்டம் நடந்தது.
விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 4ம் தேதி துவங்கியது. மறுநாள் காலை துவஜாரோகணமும், மாலை அம்ஸ வாகனத்தில் சுவாமி கோவில் வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து, சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம் மற்றும் கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.பத்தாம் நாள் உற்சவமான நேற்று காலை 8:15 மணியளவில் திருத்தேரில் சுவாமி வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்தனர். இன்று மாலை சந்திர பிரபையில் சுவாமி வீதியுலாயும், இரவு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது.பூஜைகளை கோவில் அர்ச்சகர் வாசு பட்டாச்சார்யார் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வாளர் கவியரசு மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.