கிராம தேவதை உற்சவம்: பூந்தேரில் பொன்னியம்மன்!
ஆர்.கே.பேட்டை: கிராம தேவதையான பொன்னியம்மனுக்கு, பக்தர்கள் மூன்று நாள் உற்சவம் கொண்டாடினர். அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில், அம்மன் வீதியுலா எழுந்தருளினார். ஆர்.கே.பேட்டை அடுத்த, வேலன்கண்டிகை கிராமத்தில், வைகாசியில் கிராம தேவதை பொன்னியம்மனுக்கு உற்சவம் நடத்தப்படும். கடந்த வெள்ளிக்கிழமை பொன்னியம்மன் உற்சவம் துவங்கியது. வெள்ளி இரவு அன்னலட்சுமியாகவும், சனிக்கிழமை மீனாட்சி அலங்காரத்திலும், அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் காலை, கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்தனர். மதியம் கூழ் வார்த்தலும், துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்துவதிலும் கிராம மக்கள் ஈடுபட்டிருந்தனர். இரவு வாண வேடிக்கையுடன், அம்மன் அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் வீதியுலா எழுந்தருளினார். ஊர்வலம், வேலன்கண்டிகை, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.