வைத்தீஸ்வரன் கோவிலுக்கு முதுநிலை அந்தஸ்து!
சென்னை: நாகை மாவட்டத்தில் உள்ள, வைத்தியநாதசாமி திருக்கோவில் அர்ச்சகர் நல சங்கம் மற்றும் ஊழியர்கள் நல சங்கம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, அறநிலையத் துறை இணை கமிஷனர் நிர்ணயித்து, வழங்கினார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆண்டு தோறும், கோவிலின் வருமானத்தை பரிசீலிக்க வேண்டும். முதுநிலை கோவிலா, இல்லையா என, அறிவிக்க வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கோவிலின் வருமானத்தை பரிசீலிக்கவில்லை. அதனால், எங்களுக்கு ஊக்க ஊதியம், பஞ்சப்படி, வழங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை, வேண்டுமென்றே பின்பற்றவில்லை. எனவே, அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதி நாகமுத்து முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆஜராகினர். அறநிலையத் துறை சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கந்தசாமி, அரசு வழக்கறிஞர், எம்.எல்.மகேந்திரன் ஆஜராகி, அறநிலையத் துறையின் உத்தரவை, தாக்கல் செய்தனர். அதில், ‘நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தியநாதசுவாமி கோவிலை, முதுநிலை திருக்கோவில்’ என, அறிவிக்கலாம் என, முடிவு செய்து, உத்தரவு வெளியிடப்படுகிறது’ என, கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அறநிலையத் துறை அதிகாரிகள் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, நீதிபதி நாகமுத்து முடித்து வைத்தார்.