கேதார்நாத் கோவில் பாதிப்பு: ஓராண்டாகியும் சீராகவில்லை!
கேதார்நாத்: கடந்த ஆண்டு இதே நாளில், பயங்கர சேதத்தை சந்தித்த கேதார்நாத் சிவன் கோவிலில், ஓராண்டு ஆகியும், நிலைமை பெரிய அளவில் மாறவில்லை. கோவில் மட்டும் புனரமைக்கப்பட்டு உள்ளது. இமயமலையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றான உத்தரகண்டில், கடந்த ஆண்டு, ஜூன் 15 மற்றும் 16ல், பெய்த பேய் மழையால், கரைபுரண்டொடிய மந்தாகினி ஆற்று நீரில், பிரசித்தி பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோவிலுக்குள் வெள்ளம் புகுந்ததால், பாறைகளும், மண் குவியல்களும் கோவிலுக்குள் குவிந்ததால், 6 அடி உயரத்திற்கு மண் மூடியது; கோவிலுக்கு வெளியே, நடக்கவே முடியாத அளவிற்கு, பாறைகள் சிதறி கிடந்தன. கோவிலுக்கு சென்ற, 6,500 பக்தர்கள் பலியாயினர்; வெளியேற முடியாமல் சிக்கித் தவித்த, ஒரு லட்சம் பேர், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். அந்த சோகம் நடந்து, நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கோவில் மட்டும் தான் வழிபாட்டுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது; பக்தர்களுக்கு எந்த வசதியும் மேற்கொள்ளவில்லை.
கோவிலுக்கு வரும் பாதைகள் சிதைந்ததால், வேறு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. கோவிலுக்கு வெளியே கிடக்கும் கற்கள் அப்புறப்படுத்தப் படவில்லை. இதனால், பக்தர்கள் வருகையும் குறைவாக இருந்தது. இந்நிலையில், ’கேதார்நாத் கோவில், மத்திய அரசின், தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தான், அதை சரிவர புனரமைக்க முடியவில்லை’ என, கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர். ’கோவிலின் மேற்பகுதியில் தண்ணீர் ஒழுகுவதாகவும், சுவர்கள் பலமிழந்துள்ளதாகவும், அவற்றை சரி செய்ய, தொல்பொருள் ஆய்வுத் துறையினர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை’ என, கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள தொல்பொருள் ஆய்வுத் துறையினர், ’எளிதில் அணுக முடியாத நிலையில், கோவிலை சுத்தப்படுத்தியதே பெரிய சாதனை தான். கோவிலின் அடித்தளம் மற்றும் சுவர்களின் பலத்தை, சென்னை, ஐ.ஐ.டி., வல்லுனர்கள் ஆராய்ந்து வருகின்றனர்’ என, தெரிவித்து உள்ளனர்.