புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியலுக்கு சீல்!
ஓசூர்: ஓசூரில் உள்ள, புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த முடிவு செய்துள்ளதால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் உண்டியலுக்கு, நேற்று சீல் வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகரில், 1,500 ஆண்டு பழமையான சுயம்பு கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மே மாதம், மாவிளக்கு மற்றும் பல்லக்கு உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த மாதம், 22ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி சிறப்பாக நடந்தது. இந்நிலையில், கோட்டை மாரியம்மன் கோவிலை, ராம்நகர் பகுதி பொதுமக்கள் நிதி உதவியுடன், தனிநபர்கள் சிலர் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது. இதனால், நேற்று மாலை ராம்நகர் பகுதிக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் அருகில் இருந்த ராமர் கோவில் உண்டியலுக்கு சீல் வைத்தனர். இதை பார்த்த பொதுமக்கள் சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற ராம்நகர் பகுதியை சேர்ந்த, 55க்கும் மேற்பட்ட பொதுமக்கள், உண்டியலில் வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டுமென, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை சமாதானப்படுத்திய, சப்-கலெக்டர் பிரவின்நாயர், பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். இதில், உண்டியல் சீலை, அதிகாரிகள் அகற்றுவதாக ஒப்புக்கொண்டதால், பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.