சக மனிதனின் கண்ணீரை துடைப்பதே ஆன்மிகம்!
விருகம்பாக்கம் : சக மனிதனின் கண்ணீரைத் துடைப்பதே ஆன்மிகம் என, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார். குடந்தை தெய்வ சேக்கிழார் மன்றம் சார்பில், சாமி தியாகராஜனின், சொன்னால் விரோதம்; ஆயினும் சொல்கிறேன், பூவும் நாறும் ஆகிய நுால்களின் வெளியீட்டு விழா நடந்தது.அதில் கலந்து கொண்ட, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆன்மிகம் என்பது, தனியானது அல்ல; ஒருவன் திக்கற்று நிற்கும்போது, அவனுக்கு மன ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துவதே ஆன்மிகம். ஆன்மிகத்திற்கு, நிறமோ, மதமோ இல்லை. உண்மையான ஆன்மிகம் பேதம் பார்க்காது. ஆனால், அதை உணர்ந்து கொள்வதில் தான் மனிதர்களுக்குள் சிக்கல் இருக்கிறது, என்று பேசினார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, முன்னாள் மத்திய அமைச்சர், ஜி.கே.வாசன், நானும், இல.கணேசனும், கட்சியால் கொள்கைகளால் வேறுபட்டவர்கள். ஆயினும், எங்களை எப்போதும், ஒரே மேடையில் அருகருகே அமர்த்தி வைக்கும் பணியை, தேசியம், இசை, இலக்கியம் உள்ளிட்ட கலைகள் செய்விக்கும். அந்த கலையின் சக்தியால் தான், இப்போது, அருகருகே அமர்ந்திருக்கிறோம், என்றார். நிகழ்ச்சியில், செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர், அவ்வை நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.