ஸ்ரீரங்கம் கோவிலில் திருப்பணி துவக்கம்!
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகத்திற்காக, ராஜகோபுர திருப்பணி, நேற்று துவங்கியது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த, 5ம் தேதி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், 10.5 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா நடந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் கார்த்தி, ""நடப்பாண்டு தமிழக முழுவதுமாக, 5,000 சிறிய, பெரிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும், என தெரிவித்தார். ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஏழு பிரகாரங்கள், 21 கோபுரங்கள் உள்ளன. இங்கு, 2001ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாநிஷேகம் நடைபெற்று, 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, முன்று கட்டமாக பிரித்து, முதற்கட்டமாக, ஏழு கோபுரங்களுக்கு திருப்பணி, நேற்று துவங்கியது. வெள்ளை கோபுரம், ராஜகோபுரம் அருகிலுள்ள நான்கு கோபுரங்கள், மேலவாசல் கோபுரம், வடக்கு வாசல் கோபுரம் உள்ளிட்ட, ஏழு கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராம் திருப்பணியை துவக்கி வைத்தார். அறங்காவலர் ரெங்காச்சாரி, சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.