வெங்கட்டம்பட்டியில் கும்பாபிஷேக விழா
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த வெங்கட்டம்பட்டி ஸ்ரீ கோதண்டராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. தர்மபுரி அருகே வெங்கட்டம்பட்டியில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவில் நிறுவி, 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி, 50ம் ஆண்டு பொன் விழா கடந்த, 26ம் தேதி காலை துவங்கியது. இதில், முதல் நாளில் வேத மந்திரங்கள் ஓத கொடியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான, 27ம் தேதி ஸ்ரீ சீதா ஸமேத ராமசந்திரமூர்த்திக்கு ஆவாஹனம், கும்ப ஸ்தாபனம், மங்கள ஆரத்தி, யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன. 28ம் தேதி உற்சவ மூர்த்திகளுக்கு, ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை, 5ம் கால பூஜை, சதுஸ்தான பூஜை, மஹாபூர்னாஹீதி, ஹோமங்கள் யாக சாலையில் நடந்தது. 9.45 மணியில் இருந்து, 10.45 மணிக்குள் பிரதான அர்ச்சகர்களால் மந்திரங்கள் ஓத மஹா கும்பாபிஷேகம் விழா நடந்தது. நிகழ்ச்சியில், சேலத்தை சேர்ந்த ஆன்மீக சொற்பொழிவாளர் குணசேகர ராமனுஜ தாசனரின் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இரவு, 7 மணிக்கு கருட வாகனத்தில் ஸ்ரீ சீதா ராமர் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று பகல், 12 மணிக்கு ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.