சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் அவதி!
வத்திராயிருப்பு: தமிழகத்தின் புகழ்பெற்ற மலைவாச சிவஸ்தலமான சதுரகிரி மலையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்துக்களின் புண்ணிய ஸ்தலங்களில் முக்கியமானதாக இக்கோயில் கருதப்படுகிறது. புராண காலங்களில் வாழ்ந்த 18 சித்தர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மலையில் வாழ்ந்து வந்தனர். சதுரகிரி மலையில்தான் அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இறைவனை வழிபட்டனர். அனைத்து சித்தர்களின் காலடிபட்ட புனித மலையாக உள்ளதால் பக்தர்கள் இதை புண்ணிய பூமியாக கருதுகின்றனர். சித்தர்கள் தினமும் வந்து இங்குள்ள சந்தனமகாலிங்கம், சுந்தரமகாலிங்க சுவாமிகளை பூஜை செய்வதாக ஐதீகம். இந்த மலைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடி அமாவாசையில் மட்டுமே பக்தர்கள் சென்றனர். ஆனால் தற்போது மாதம் தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை, சனி, ஞாயிறு, விடுமுறைமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இது தவிர தினமும் நூற்றுக்கணக்கா னோர் செல்கின்றனர்.
நிரந்தர பூசாரி தேவை: சதுரகிரி மகாலிங்கம் கடவுள்களுக்கெல்லாம் கடவுள். மேலும் சித்தர்கள், நவகிரகங்கள், அஷ்டதிக்பாலகர்கள், பஞ்சபூதங்கள் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவன் என்பதால் இவரை வழிபட கால நேரம் கிடையாது. இதன் காரணமாகத்தான் சுந்தரமகாலி ங்கத்தை எந்த நாளும் எந்த நேரத்திலும் தரிசிக்கலாம் என்பதற்காக இரவு நேரத்தில் கூட திரை போடாமல் மூலஸ்தானத்திற்கு மட்டும் பாதுகாப்பு கருதி கிரில் கதவு மட்டும் போட்டு சாத்தப்பட்டிருப்பது வழக்கமாக இருந்தது. இதனால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மலையேறி வரக்கூடிய பக்தர்கள் நடு இரவிலும் கூட கிரில் வழியாக மகாலிங்கத்தை தரிசித்து விட்டு பிறந்த பயனை அடைந்த திருப்தியுடன் மலை இறங்கி விடுவர். ஆனால் கடந்த ஓராண்டாக மட்டும் தற்போது உள்ள பூசாரியும் அவரது குடும்பத்தினரும் இரவு 7 மணிக்கே மூலஸ்தானம் முழுவதும் திரை போட்டு மறைத்து விட்டு, கிரில் கதவையும் பூட்டி விடுகின்றனர். இதனால் இரவு 7 மணிக்கு மேல் வரும் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் மகாலிங்கத்தை தரிசிக்க முடியாமல் அங்கேயே தங்கி மறுநாள் காலை தான் தரிசிக்க வேண்டியுள்ளது.
இதில் சில பக்தர்கள் பாதுகாப்பு கருதி மகாலிங்கத்தை தரிசிக்காமல், மலையிலும் தங்காமல் கீழே இறங்கி ஏமாற்றத்துடன் ஊர் திரும்பும் நிலை ஏற்படுகிறது. யார் இந்த பூசாரி; இவர்கள் இவ்வாறு செய்வதன் நோக்கம் என்ன என்று விசாரிக்கைøயில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கோயில் அறங்காவலர் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த குழுவின் செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தினால் இந்து அற நிலையத்துறை அறங்காவலர் குழுவை நீக்கிவிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கோயிலை கொண்டு வந்து சிறப்பாக செயலாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்போது உள்ள பூசாரி ஏற்கெனவே இருந்த அறங்காவலர் குழுவால் நியமிக்கப்பட்டவர். இந்த பூசாரியும் அவரது குடும்பமும் பழைய அறங்காவலர் குழுவுக்கு விசுவாசி என்பதால் அவர்கள் கூறுவதை கேட்டு தற்போது செயல்படுகின்றனர். அதனடிப்படையில் தான் சுந்தரமகாலிங்கத்தின் மூலஸ்தானம் பகலில் சில மணி நேரமும், இரவில் பல மணி நேரமும் பக்தர்களால் தரிசனம் செய்ய முடியாத அளவுக்கு திரை போட்டு மறைக்கப்பட்டு விட்டது. இப்படி செய்வதன் மூலம் பக்தர்கள் கோயில் திறக்கும் வரை காத்திருந்து பூசாரிக்கு காணிக்கை செலுத்திய பின் தான் சிவனின் தரிசனம் என்கிற அளவுக்கு வந்து விட்டது. மகாலிங்கத்தின் காணிக்கை தயவால் பூசாரி குடும்பத்தினர் மலை அடிவாரத்திலும் சுற்றுப்பகுதிகளிலும் நிறைய சொத்துக்கள் வாங்கியிருப்பதாகவும், காணிக்கையின் ஒரு பகுதி பழைய அறங்காவலர் குழுவிற்கு செல்வதாகவும் செவி வழி செய்தி. இந்து அறநிலையத்துறை இக்கோயிலை தன் வசப்படுத்தி பக்தர்கள் வசதிக்காக பல திறமையான நடவடிக்கைகள் எடுத்து பாராட்டை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது உள்ள பூசாரி குடும்பத்தினர் சுந்தரமகாலிங்கம் கோயிலை தங்களது குடும்ப கோயிலாக கொண்டு வருவதற்குள், மகாலிங்கத்தின் காணிக்கையால் பூசாரிகுடும்பத்தினரால் சேர்க்கப்பட்ட சொத்தின் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், அறங்காவலர் குழுவால் நியமிக்கப்பட்ட பூசாரியையும் அவரது குடும்பத்தினரையும் நீக்கிவிட்டு, அதற்கு பதில் அறநிலையத்துறை சார்பாக பூசாரி போட்டு மகாலிங்கத்திற்கு சரியான முறையில் பூஜை செய்ய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சதுரகிரி சுந்தரமகா லிங்க பக்தர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
கழிப்பறை வசதி: இவ்வளவு அதிகமான பக்தர்கள் வருகை இருந்தும் அவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்யப்பட வில்லை. மிக முக்கியமாக கழிப்பறை வசதி மருந்துக்கு கூட கிடையாது. பெயருக்காக கட்டப் பட்டுள்ள ஒரேயொரு கழிப்பறையிலும் தண்ணீர் இல்லாததால் உபயோகமின்றி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மலைப்பாதைகளின் இருபுறமும் பக்தர்கள் மலஜலம் கழித்து அசுத்தப்படுத்தி விடுகின்றனர். அந்த வழியாக செல்பவர்கள் மூக்கைப்பிடித்துக்கொண்டு ஓட வேண்டியுள்ளது. புனிதமான மலையில் பெரும் சுகாதாரக்கேடான நிலை உள்ளது. பெண்கள் அவசரத்திற்கு ஒதுங்குவதற்கு கூட வழியின்றி பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். எனவே அங்கு தண்ணீர் வசதியுடன் ஆங்காங்கு கழிப்பறைகள் கட்ட அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர்: பெரும்பாலான நாட்களில் மலையில் உள்ள ஆறுகளில் தண்ணீர் வறண்டு விடுவதால் கோயில் நிர்வாகம் குழாய்களின்மூலம் சப்ளை செய்யும் நீரையே பக்தர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். ஆனால் இது பக்தர்களுக்கு போதுமானதாக இல்லை. பெரும் தட்டுப்பாடாக உள்ளதால் வி÷ ஷச நாட்களில் மொட்டைபோடும் பக்தர்கள் குளிப்பதற்குக்கூட நீர் இன்றி, மினரல் வாட்டர் பாட்டில்களை வாங்கி ‘காக்காய் குளியல் போட்டுத்தான் தரிசனம் செய்ய செல்கின்றனர். திருவிழா நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு மிக அதிகமாக உள்ளது. எனவே தற்போதுள்ள நீர் ஆதாரம் தவிர, மேலும் பல இடங்களில் போர்வெல் போட்டு நீர்ஆதாரங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு இரவில் தங்கி மறுநாள் காலையில் சிவனை தரிசனம் செய்வதையே பெரும்பாலான பக்தர்கள் விரும்புகின்றனர். ஆனால் பக்தர்கள் தங்குவதற்கு போதிய வசதியில்லை. இங்குள்ள ஷெட்டுகள் தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், திருவிழா தவிர மற்ற நாட்களில் இந்த ஷெட்டுக்கள் பூட்டி வைக்கப்பட்டு பக்தர்களுக்கு உபயே õகமில்லாமல் உள்ளது. எனவே தனியார் வசம் உள்ள ஷெட்டுக்களைஅரசு கையகப்படுத்தி அதை பக்தர்களுக்கு பயன்படும் வகையில் வழிசெய்ய வேண்டும். அப்படியே ஷெட் போடப்பட்டிருந்தாலும், மழைக்கும் வெயிலுக்கும் பக்தர்களை பாதிக்கும் அளவிற்கு ஷெட்டின் உயரம் மிக குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. ஷெட்டின் உயரம் குறைந்தது 7 அடியாவது அமைக்க அனுமதிக்க வேண்டும். இங்கு குளிக்கும் பெண்களுக்கு உடைமாற்றும் அறைகள் கட்ட வேண்டும்.
அன்னதானம்: சதுரகிரியைப்பொறுத்தவரை அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் கூட்ட நேரங்களில் பக்தர்கள் அமர்ந்து சா ப்பிடபோதிய வசதிகள் இல்லை. எனவே அரசே பெரிய அன்னதானக்கூடங்களை கட்டித்தரலாம். அல்லது அன்னதானம் போடும் தனியாருக்கு அன்னதான கூடம் அமைக்க அனுமதி தரலாம்.
மருத்துவ முகாம்: திருவிழா காலத்தில் அசம்பாவிதமாக விபத்து ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி செய்ய மருத்துவ முகாம் தேவை.
சபாஷ்: மலைப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமித்து கடை போடப்பட்டதை அகற்றி பக்தர்களுக்கு வசதி செய்து கொடுத்து, அவர்களின் பாராட்டை பெற்ற அறநிலையத்துறை அதிகாரிகள், அதேபாணியில் மேற்கண்ட குறைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்து பக்தர்களை அவஸ்தைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதே சதுரகிரி பக்தர்களின் ஒருமித்த கோரிக்கை.