பன்னிரு திருமுறை நூல் வெளியீட்டு விழா!
தஞ்சாவூர்: தருமபுரம் ஆதீனம் சார்பில், பன்னிரு திருமுறை நூல் வெளியீட்டு விழா, சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் வரும், 6ம் தேதி துவங்கி, 8ம் தேதி முடிய நடக்கிறது. இதுகுறித்து தஞ்சையில், திருச்சி, மௌனமடம் குமார சுவாமிகள் கூறியதாவது: சைவமும், தமிழும் தழைத்தோங்க வேண்டும் என்பதே தருமை ஆதீனத்தின் நோக்கம். இதற்காக திருமுறைகள், சாத்திரங்கள் மற்றும் சமய இலக்கியங்களை தொகுத்து நூல்களாக வெளியிட்டு வருகிறோம். 12 திருமுறைகளை உள்ளடக்கிய, 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட புதிய நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோல், 14 சாத்திரங்களை உள்ளடக்கிய, 1,300 பக்கங்கள் கொண்ட நூல், 10 ஆசிரியர்கள் உரையுடன், 2,008 பக்கங்கள் கொண்ட திருக்குறள் உரைவளம் நூல் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா, சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் வரும், 6ம் தேதி துவங்கி, 8ம் தேதி முடிய நடக்கிறது. துவக்க நிகழ்ச்சியாக, 6ம் தேதி காலை, 10 மணிக்கு, குருமகா சந்நிதானம் ஞான ரதத்தில் எழுந்தருளல் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. பாஸ்கர் தீட்சிதர் தலைமை வகிக்கிறார். தருமை ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் நூல்களை வெளியிட்டு ஆசியுரை நிகழ்த்துகின்றனர். முதல் பிரதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விமலா பெற்றுக்கொள்கிறார். ஆதீன நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.