உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி ஒப்பாரி தி.மலையில் நூதன வழிபாடு!

மழை வேண்டி ஒப்பாரி தி.மலையில் நூதன வழிபாடு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மழை வேண்டி, உருவ பொம்மையை எரித்து, ஒப்பாரி வைத்து, நூதன போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சரியான முறையில் மழை பெய்யவில்லை. வரலாறு காணாத வகையில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால், விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால், பல்வேறு கிராமங்களில், மக்கள் மழை வேண்டி, நூதன வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில், மழை வேண்டி மக்கள் நூதன வழிபாடு நடத்தினர். கிராமத்தின் நடுவில் திரண்ட மக்கள் உருவ பொம்மை ஒன்றை தயார் செய்து, அதனை பாடையில் ஏற்றி, ஒப்பாரி வைத்து அழுதனர். பின், உருவ பொம்மை வைத்த பாடையை, தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக மயானத்துக்கு, தூக்கி சென்றனர். இறுதியாக சென்ற பொதுமக்கள், பாடையை இறக்கி வைத்து, இறுதி சடங்கு செய்தனர். அப்போது, ஊர் பெண்கள் கூடி, ஒருவரை ஒருவர், கட்டித்தழுவி ஒப்பாரி வைத்து அழுதனர். இதை அடுத்து, உருவ பொம்மைக்கு தீயிட்டு கொளுத்தினர். பின், ஏரிக்கரையில் திரண்டு, பொங்கலிட்டு, சிறப்பு பூஜை செய்து மழை பெய்ய வழிபாடு நடத்தினர். இதனை காண, சுற்றுவட்டாரத்தில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !