கடற்கரைக்கோவில் அருகில் வெளிப்பட்ட மகிஷாசுரமர்த்தினி குகை சிற்பம்!
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரைக்கோவில் அருகே, நீர்பரப்பு பகுதி வறண்டு மணல்வெளியாக மாறியதால், மகிஷாசுரமர்த்தினி குகை சிற்பம் தெரியவந்துள்ளது. மாமல்லபுரத்தில், கடற்கரைக்கோவில் முக்கிய பாரம்பரிய கலைச்சின்னமாக விளங்குகிறது. இக்கோவில், கடற்கரையொட்டி அமைந்துள்ள நிலையில், நாளடைவில், கடல்நீர் சூழ்ந்து, கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. அதை தவிர்க்க, 25 ஆண்டுகளுக்கு முன், கோவிலைச் சுற்றி கருங்கல் குவித்து, தடுப்பு அரண் அமைக்கப்பட்டது. கோவில் வளாக பகுதியின் நிலமட்டத்தையும் உயர்த்தி, பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.இது ஒருபுறமிருக்க, கோவிலிலிருந்து, 100 மீ., தொலைவு வடமேற்கில், சிறு பாறைக்குன்றில் செதுக்கிய, ’மகிஷாசுரமர்த்தினி குகை’ குடைவரை சிற்பமும் உள்ளது. இச்சிற்பம், கோவில் பகுதி நிலமட்டத்திற்கு, மிக தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. மேலும் தடுப்பு அரண் உருவான பின், குகை சிற்ப குன்றை, கடல்நீர் சூழ்ந்து, அதன் மேற்பரப்பு மட்டுமே வெளியில் தெரிந்தது. நீரோட்டபோக்கு மாற்றத் தின்போது, நீர்மட்டம் உயர்ந்தும், குறைந்தும் காணப்படும். முழு குன்றும் வெளிப்படாமல், அரைகுறையாகவே காணப்படும். இந்நிலையில், தற்போது, தடுப்பு அரண் அருகில், குகை சிற்ப குன்று அமைந்த பகுதி யில், கடல்நீரின்றி, வறண்டு மணல்வெளி தெரிய வந்துள்ளது. இதையடுத்து, முழுசிற்பமும் தெரிய துவங்கி உள்ளது. இதுகுறித்து, மாமல்ல புரம் தொல்லியல் துறை அலுவலர் ஜீலானிபாஷா கூறுகையில், ”கடற்கரை கோவிலின் வடக்கு பகுதியில் உள்ள, மகிஷாசுரமர்த்தினி குகை சிற்ப மும், பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னம்தான். தாழ்வான பகுதி என்ப தால், கடல்நீர் சூழ்ந்து உள்ளது. அப்பகுதி வரை, கருங்கல் தடுப்பு அரணை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது. ஆய்வு நடத்திய பிறகே, இதுபற்றி முடிவெடுக்கப்படும்,” என்றார்.