அக்னி வசந்த உற்சவ விழாவில் துரியோதனன் படுகளம்!
திருக்கழுக்குன்றம் : முத்திகை நல்லான்குப்பத்தில் திரவுபதியம்மன் கோவில், அக்னி வசந்த உற்சவ விழாவில், நேற்று, துரியோதனன் படுகளம் நடந்தது. திருக்கழுக்குன்றம், முத்திகை நல்லான்குப்பத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த உற்சவ விழா, கடந்த மாதம் 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து, காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் மற்றும் தீபாராதனை யும் நடந்தது. பிற்பகல் 1:30 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்தது.கடந்த 20ம் தேதி திரவுபதி சுயம்வரமும், 21ம் தேதி சுபத்திரை திருக்கல்யாணமும் நடந்தது. அதை தொடர்ந்து, நேற்று பகல் 1:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நடந்தது. அதை தொடர்ந்து சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பொங்கல் வைத்தனர். மாலை தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.