நாட்டராயசுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்!
வெள்ளகோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையத்தில் நாட்டராயசுவாமி, நாச்சிமுத்து அய்யன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, வரும், ஒன்பதாம் தேதி நடக்கிறது. வெள்ளகோவில்-முத்தூர் பிரதான ரோட்டில், ஈரோடு செல்லும் வழியில், நான்கு கி.மீ.,ல், வலதுபுறமாக, ஒரு கி.மீ., தொலைவில், கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆறு கோடி ரூபாய் செலவில், சீரமைப்பு பணிகள் நடந்தது. இக்கோவில், தினமும் காலை, ஆறு முதல், மாலை ஆறு மணி வரை திறந்திருக்கும். தினமும், நான்கு கால பூஜைகள் நடக்கிறது. வார நாட்களில் செவ்வாய் மற்றும் அமாவாசை தினங்களில், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. செவ்வாய் கிழமை, இரவு முழுவதும், கோவில் திறந்திருக்கும். பூஜைகள், இரவு முழுவதும் நடக்கும்.
இக்கோவிலில், நாட்டராயசுவாமி, நாச்சிமுத்து அய்யன்சுவாமி மற்றும் மகாமுனி, கருப்பணசாமி, பரிவார தெய்வங்களுக்கு, புதிய கோவில் அமைக்கப்பட்டது. கொங்கு நாட்டில், 18 குல காணியாளர்களுக்கு, காவல் தெய்வமாகவும், குல தெய்வமாக இக்கோவில் விளங்குகிறது. திருமணத்தடை நீக்குதல், குழந்தைப்பேறு அருளுதல், மனநோய் அகற்றுதல், உடல் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்த்தல், பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளுக்காக, இக்கோவிலை வழிபடுகின்றனர். வரும், ஒன்பதாம் தேதி நடக்கும் கும்பாபிஷேகத்துக்காக, முத்தூர், வெள்ளகோவில் பகுதியில் இருந்து அரசு மற்றும் தனியார் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தன்று, அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில் திருப்பணிக்கு நன்கொடையாளர்களிடம் இருந்து பணம் பெற்று, கோவில் வளாகத்தில், ரசீது வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் காணியாளர், மேட்டுப்பாளையம் சக்திவடிவேல் தலைமையில் திருப்பணிக்குழுவினர் செய்கின்றனர்.