சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று மகா சம்ப்ரோக்ஷணம்!
புதுவள்ளூர் : புதுவள்ளூர் சீனிவாச பெருமாள் கோவிலில், இன்று, மகா சம்ப்ரோக்ஷணம் நடக்கிறது. கடம்பத்துார் ஒன்றியம், பாப்பரம்பாக்கம் அருகே உள்ளது புதுவள்ளூர். இங்குள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், இன்று காலை 10:30 மணி முதல் 10:45 மணிக்குள், அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.முன்னதாக, நேற்று முன்தினம், காலை 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையும், சங்கடகர கணபதி ஹோமமும், பூர்ணாஹூதி தீபாராதனையும் நடந்தது. அதன்பின், நேற்று காலை 8:00 மணிக்கு, கால சாந்தி பூஜைகளும், காலை 11:00 மணிக்கு மகா சாந்தி ஹோமமும், உற்சவர் திருமஞ்சனம் விமான அதிவாச ஹோமமும், பகல் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது.மாலை 5:00 மணிக்கு விமானங்கள் கண் திறப்பு நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு கோபூஜையும், பிரதான ஹோமங்களும் நடந்தன.இன்று காலை 7:00 மணிக்கு, சுப்ரபாதம் காலசாந்தி பூஜையும், அதன்பின் மகா பூர்ணாஹூதியும், காலை 10:45 மணிக்கு மகா சம்ப்ரோக்ஷணமும் நடைபெறுகிறது.