திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் திருப்பணி: 65 சதவீதம் நிறைவு!
திண்டுக்கல் : திட்டமிட்ட காலத்திற்குள் அபிராமி அம்மன் கோயில் திருப்பணியை முழுமையாக முடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான அபிராமி அம்மன் கோயில் சிதிலமடைந்திருந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய கோயிலை நிர்மாணிக்கும் பணி 2013 ஜூனில் துவக்கப்பட்டது. பணிகள் துவங்கி ஓராண்டு ஆன நிலையில், காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர் சன்னதிகளில் கருங்கல் சுவர் அமைக்கும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. அம்பாள் மற்றும் ஞானாம்பிகை சன்னதிகளில் 80 சதவீத கருங்கல் பணி நிறைவடைந்துள்ளது. ஆகஸ்ட்டிற்குள் ராஜகோபுர பணியை முழுமையாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து மகா அலங்கார மண்டபம், 52 தூண்களில் அமைப்பதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூணிலும் சித்திர வேலைபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மகா மண்டபம் 70 அடி அகலம், 90 அடி நீளம், 16 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக கணபதி, பெருமாள், முருகன் உட்பட 7 பரிவார தெய்வங்களுக்கான சன்னதிகள் சுற்றுச்சுவருக்குள் உருவாக்கப்படும். இதுவரை 65 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.தலைமை ஸ்தபதி பாஸ்கரன் கூறுகையில்,""திருப்பணியில் 70 சிற்ப கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். திட்டமிட்ட காலத்திற்குள் திருப்பணியை முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம், என்றார்.