உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோனியம்மன் கோவில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜைகள் இன்று துவக்கம்!

கோவை கோனியம்மன் கோவில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜைகள் இன்று துவக்கம்!

கோவை : கோவையின் காவல் தெய்வமான கோனியம்மனுக்கு ஜூலை 11ம் தேதி குடமுழுக்கு விழா நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. கட்டட, கட்டுமானம், வர்ணம்பூசுதல் உள்ளிட்ட அனைத்துப்பணிகளும் நிறைவடைந்து. குடமுழுக்குவிழாவுக்கு தயார் நிலையிலுள்ளது. கோனியம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணிக்கான அடிக்கல் 2007 அக்., 17ல் நாட்டப்பட்டது. மண் ஆய்வு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடந்தன. ஏழு ஆண்டுகளுக்குப்பின் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது, அதில் 9 செப்புக்கலசங்களுக்கு, ஆறு அடுக்குகளில் தங்கமுலாம் பூசப்பட்டு கோபுர கலசங்கள் அமைக்கப்பட உள்ளது. தரை மட்டத்திலிருந்து 93 அடி உயரத்துக்கு ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.இதில் 14 வரிசைகளில் கல்காரத்திருப்பணிகள் (27 அடி உயரத்துக்கு) அதற்கு மேல் 66 அடி உயரத்துக்கு சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராஜகோபுரதிருப்பணிக்காக ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பக்தர்கள் உபயமாக கொடுத்த தொகையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோனியம்மன் கோவில், ராஜகோபுர திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக அரசின் ஒப்புதலை பெற்று, தற்போது கும்பாபிஷேக விழா, ஜூலை 11 ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி கட்டட கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. குடமுழுக்கு விழாவின் முதல் நிகழ்ச்சி இன்று மாலை 5.00 மணிக்கு துவங்குகிறது. தமிழக அரசு விருது பெற்ற தருமபுரி ஜெயபாலனின் மங்கல இசையுடன் விழா துவங்குகிறது. சர்வசாதகர் ராஜப்பா குருக்கள் தலைமையில் சிறப்பு வேள்விகள் மற்றும் சிறப்பு பூஜைகள் இன்று மாலை 6.00 மணிக்கு துவங்குகிறது. கண்ணப்பன் ஓதுவார் குழுவினர், அகண்ட திருமுறை பாராயணம் செய்கின்றனர். இரவு 7.00 மணிக்கு, புதிய ராஜகோபுர அமைப்புத்தலத்தில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரவு 9.00 மணிக்கு திருநீறு, திருவமுது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை ஜூலை 4ம் தேதி சிறப்பு யாக வேள்விகள் காலை 7.00 மணி முதல் தொடர்கிறது. அதிக அளவில் வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் கோவில் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !