உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவேகானந்தர் மண்டபத்தில்ரசாயன கலவை பூசும் பணி!

விவேகானந்தர் மண்டபத்தில்ரசாயன கலவை பூசும் பணி!

நாகர்கோவில்:கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை கட்டடங்கள் உப்புக்காற்றால் அரிப்பதை தடுக்க ரசாயன கலவை பூசும்பணி தொடங்கியது. சுவாமி விவேகானந்தர் 1892ம் ஆண்டு கன்னியாகுமரி வருகை தந்தார். அப்போது, கடலில் நடுவே உள்ள பாறையில் பகவதி அம்மனின் பாதம் பதிந்துள்ள இடத்தில் டிசம்பர் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் அமர்ந்து தியானம் செய்தார். இதன் நினைவாக அந்த பாறையில் 1964ல் சுவாமி விவேகானந்தர் மண்டபம் கட்டும் பணி தொடங்கியது. 1970ல் இந்த மண்டபத்தை அப்போதைய ஜனாதிபதி வி.வி. கிரி திறந்து வைத்தார். இந்த மண்டபத்தை விவேகானந்தா கேந்திரா நிர்வாகம் பராமரித்து வருகிறது. மண்டபம் கட்டப்பட்டு 44 ஆண்டுகளான நிலையில் கடலின் உப்பு காற்றால் மண்டபம் பாதிக்கப்படுவதை தடுக்க ரசாயன கலவை பூச முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த மண்டபத்தின் மேற்கூரையில் இரும்பு கம்பிகளால் சாரம் அமைத்து 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரசாயன கலவை கலந்த சிமெண்டை பூசும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கூரையில் உள்ள இடைவெளி வழியாக உப்புக்காற்று மண்டபத்துக்குள் புகுவதை தடுக்க ரூ.5 லட்சம் செலவில் இந்த பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே, திருவள்ளுவர் சிலைக்கு உப்புக்காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க ரசாயன கலவை அண்மையில் பூசப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !