உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை கோவில் கும்பாபிஷேகம் அரோகரா கோஷம் கோலாகலம்!

சிவன்மலை கோவில் கும்பாபிஷேகம் அரோகரா கோஷம் கோலாகலம்!

காங்கயம்:சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்களின், அரோகரா கோஷம் முழங்க, நேற்று கோலாகலமாக நடந்தது; ஹெலிகாப்டர் மூலம் பூதுாவப்பட்டது.திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், மூன்று கோடி ரூபாய் மதிப்பில், புதிய ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை, 4:30 மணிக்கு, 4ம் கால யாக பூஜை துவங்கியது. காலை, 5:45 மணிக்கு, பரிவார மூர்த்திகள் மற்றும் விமானங்களுக்குகும்பாபிஷேகம் நடந்தது.புனித நீர்யாக சாலையில், நிறை வேள்வி, மகாதீபாராதனை நடத்தப்பட்டு, சிவ வாத்தியம், மங்கள இசை முழங்க, சிவாச்சாரியார்களால், புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.காலை, 9:20 மணிக்கு, வேதங்கள், திருமறை, திருமுறைகள் ஓதப்பட்டு, ஒரே சமயத்தில், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை மற்றும் மூலவர் விமானம், ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்களின், அரோகரா கோஷம் விண்ணதிர, நடத்தப்பட்ட கும்பாபிஷேகத்தில், ஹெலிகாப்டர் மூலம், பூக்கள் துாவப்பட்டன; மின் மோட்டார்கள் மூலம் புனித நீர், பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.கோவிலில், சுப்ரமணியருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தச தானம், தச தரிசனம், பெருந்திருநீராட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடந்தன. மலையின் அடிவாரத்தில், ஆறு மண்டபங்களில் அன்னதானம் நடந்தது.அலைமோதியது:மலைக்கோவில் வளாகம், மலை படி, சாலை மற்றும் அடிவார பகுதிகளில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கும்பாபிஷேக நிகழ்வுகள், பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பக்தர்கள் மலைக்கு செல்வதற்கு, சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.கும்பாபிஷேக விழாவில், வன துறை அமைச்சர் ஆனந்தன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், காங்கயம் எம்.எல்.ஏ., நடராஜன், திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், போலீஸ்எஸ்.பி., அமித்குமார் சிங், அறநிலையத்துறை இணை ஆணையர் இளம்பரிதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !