கோவையில் கம்பீரமாக உலா வந்த கோனியம்மன் தங்க கோபுரகலசங்கள்!
கோவை: கோனியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் ஸ்தாபிப்பதற்காக வேள்வியில் வைக்கப்பட்ட ஒன்பது ராஜகோபுரகலசங்கள் கோவை நகர வீதிகளில், கம்பீரமாக திருவீதி உலா வந்தது. பக்தர்கள் பயபக்தியோடு தங்கக்கலசங்களை தரிசனம் செய்தனர். கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவிலில், ஒன்பது தங்ககலசங்களோடு கூடிய ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையிலுள்ள தங்க நகை தயாரிப்பாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து, ராஜகோபுரத்தில் வைப்பதற்கான தங்கக்கலசங்களை கோவிலுக்கு சமீபத்தில் வழங்கினர். ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் ஸ்தாபிக்ககூடிய ஒன்பது கலசங்கள் ஒவ்வொன்றும் நான்கரை அடி உயரத்தையும், ஒன்னரை அடி அகலத்தையும் கொண்டது. இதில் ஆறு அடுக்குகளில் தங்கரேக்குகள் பதிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
கோனியம்மன் கோவிலில் ஒன்பது கோபுரகலசங்களையும் வைத்து மலர்மாலைகள் அணிவித்து, வேள்விநடத்தப்பட்டது. வேள்வியில் வேதவிற்பன்னர்கள் வேதங்களை ஒத புனித தீர்த்தம் கோபுரகலசங்களின் மீது ஊற்றினர். அதன் பின்பு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தங்க கோபுரகலசங்கள் எழுந்தருளுவிக்கப்பட்டு, கோவிலிலிருந்து கோவை நகர வீதிகளில், தங்ககலசங்கள் வீதிஉலாவாக வந்தது. பெரியகடைவீதி, சலிவன்வீதி, கருப்பகவுண்டர்வீதி, ராஜவீதி, பெரியகடைவீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. நகர் முழுக்க வீடுகளின் முன்பு நின்று கொண்டிருந்த பக்தர்கள் ராஜகோபுரத்தில் அமையப்போகும் தங்க கலசங்களை இருகரம் கூப்பி வழிபாடு செய்தனர். இன்னும் சிலர் தேங்காய் பழம் வெற்றிலை, மங்கலப்பூக்களை நிறைத்து, கோபுரக்கலசங்களுக்கு சமர்பித்து வழிபாடு செய்தனர். ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் கான்கிரீ்ட் சிமெண்ட் பகுதி இனியும் தயார் நிலையில் இல்லாததால் கோபுரக்கலசங்களை கோபுரத்தின் மீது பொருத்தும் பணிகளை ஜூலை 9 ம் தேதிக்கு கோவில் நிர்வாகம் மாற்றம் செய்து வைத்துள்ளது. அன்றைய தினம் காலை கோபுரகலசங்கள் ஸ்தாபனம் செய்யப்படும். தங்கோபுர கலசங்கள் திருவீதி உலா நிகழ்ச்சியை ஒட்டி கோவில் மற்றும் தங்ககலசங்களுக்கு பலத்த போலீ்ஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.