குமாரநல்லூர் பகவதியம்மன் கோவிலில் தங்க கொடிமர பிரதிஷ்டை இன்று துவக்கம்!
பாலக்காடு: கோட்டயம் குமாரநல்லுார் பகவதி அம்மன் கோவில் தங்க துவஜ பிரதிஷ்டை திருவிழா, இன்று துவங்குகிறது. முனிவர் பரசுராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 108 துர்க்கையம்மன் கோவில்களில் ஒன்று, புகழ்பெற்ற குமாரநல்லுார் பகவதி அம்மன் கோவில். இக்கோவில், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. 1914ல், ராஜாக்களின் அனுமதியுடனும், ஒத்துழைப்புடனும் மூலஸ்தானம் முன்பு, தங்க துவஜ (கொடி கம்பம்) அமைத்து, கோவில் நிர்வாகம் விழா கொண்டாடியது. இந்த தங்க துவஜ பிரதிஷ்டையின் நுாற்றாண்டு விழா, இன்று முதல் வரும் 18ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகிறது.இவ்விழா, கலசபூஜைகளுடன் தாந்திரிக குலபதி கடியக்கோல் இல்லத்து பிரம்மஸ்ரீ கிருஷ்ணன் நம்பூதிரி தலைமையிலும், மதுரை இல்லத்து பிரம்மஸ்ரீ அச்சுதன் நம்பூதிரி, கோவில் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ ஆறம்பாடி மாதவன் சுதேவ் ஆகியோரின் முன்னிலையிலும் இன்று(ஜூலை 7) நடத்தப்படுகிறது. மாலையில், அஷ்டபந்த கலச நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 14ம் தேதி காலை 10.31 மணி முதல் 11.40 மணி வரை, கன்னி ராசி சுப முகூர்த்தத்தில் கலசாபிஷேகமும், ராமாயண மாத துவக்க நாளான 17ம் தேதி, கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. வரும் 18ம் தேதி காலை 6.30 முதல் மாலை 7.00 மணிவரை, கோவில் வளாகத்தில் உள்ள சிறப்பு மண்டபத்தில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.