உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதிலமாகும் சோழர் கால சிவலிங்கங்கள் : இந்து அறநிலைய துறை விழிக்குமா?

சிதிலமாகும் சோழர் கால சிவலிங்கங்கள் : இந்து அறநிலைய துறை விழிக்குமா?

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல இடங்களில் சிதிலமடைந்து வரும் சோழர்கால பழமையான சிவலிங்கங்களை மீட்டு, அவற்றை பாதுகாக்க, இந்து அறநிலைய துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

316 கோவில்கள்: சோழர்கள் ஆட்சிக்கு பிறகு, அவரது வம்சாவளி வந்த அரசர்கள், காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு சுற்றியுள்ள, பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்துள்ளனர். அவ்வாறு, செய்யப்பட்ட பகுதிகளில், சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து, கோவிலாக வழிபட்டனர். அவர்கள் வணங்கிய சிவலிங்கங்கள், தற்போது போதிய பராமரிப்பு இன்றி சீரழிந்த நிலையில் காணப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், 1,386 கோவில்கள் உள்ளன. இதுதவிர, 316 கோவில்கள், ஒரு கால பூஜை, கோவில்களாக உள்ளன. இந்த கோவில்களை, பரம்பரை அறங்காவலர் பாதுகாப்பில், அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வை மட்டும் செய்கின்றனர். கண்டுகொள்ளவில்லை சில சிவலிங்கங்கள், ஏரியிலும், ஆற்றங்கரையிலும், போதிய மேற்கூரை இன்றி சிதிலமடைந்து வருகின்றன. இதை ஆய்வு செய்து கோவில்கள் கட்டுவதற்கும், வழிபாட்டிற்கு கொண்டு வரவேண்டிய, அறநிலையதுறை அதிகாரிகள் சீரமைக்க முன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நிலம் மற்றும் உண்டியல் வருவாய் உள்ள கோவில்கள் மட்டுமே, அறநிலையத்துறை அதிகாரிகள் கணக்கில் வைத்து, பராமரித்து வருவதாகவும், மற்ற கோவில்களை அவர்கள் கண்டுகொள்வதுஇல்லை என்றும், கூறப்படுகிறது.

தகவலே இல்லை: இதுகுறித்து, அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுவாக ஒரு சிவன்கோவில் இருந்தால், அங்குள்ள மக்கள் சீரமைத்து வழிபாட்டு குழு ஒன்றை அமைத்து வழிபட வேண்டும். அந்த குழுவினர் பரிந்துரையின்பேரில், கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்ய முடியும். இல்லையெனில், அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடியாது. பராமரிப்பு இன்றி இருக்கும் சிவலிங்கங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. அதனை கையகப்படுத்தும் முயற்சி குறித்து, அரசிடம் இருந்தும், எந்த விவரமும் ஏதுவும் தெரியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார். ஒருவேளை பூஜைக்குகூட வழியின்றி, சீரழிந்து வரும் சிவலிங்கங்களை அரசு கையகப்படுத்தி, ஒரு கால பூஜை கோவில்கள் பட்டியலில் சேர்த்து, வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !