கோயில்களில் சமையல் பணியாளர்களாக மாறும் பக்தர்கள்!
ராஜபாளையம் : அன்னதானம் நடைபெறும் அறநிலையத்துறை கோயில்களில், சமையலர் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்படாததால், பக்தர்களே சமையல் பணியாளர்களாக மாறும் நிலை உள்ளது. தமிழகத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேல் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் உள்ளன. இதில், பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோயில்களில், அன்னதான திட்டம் செயல்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு கோயிலிலும் அன்னதான உண்டியல் உள்ளது. திருவிழா நாட்களில், அன்னதானம் அளிக்க நினைக்கும் பக்தர்கள், சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாக அதிகாரியை அணுகலாம் என போர்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆண்டில் ஒருநாள் நிரந்தரமாக அன்னதானம் அளிக்க கட்டணம் செலுத்துபவர்களுக்கு, வருமான வரிவிலக்கு சலுகையும் உண்டு. இந்த அன்னதான திட்டம் செயல்பட துவங்கியதில் இருந்து, சமையலர் மற்றும் உதவியாளர்கள் நியமனம் இல்லை. தற்காலிகமாக ஒருவரை வைத்து சமையல் நடக்கிறது. சமையல் செய்யப்பட்டவுடன், உணவுகளை சாப்பாட்டு கூடத்திற்கு கொண்டு செல்ல, இலை போட்டு, தண்ணீர் வைத்து உணவு பரிமாற ஆட்கள் இல்லை. சாப்பிட வரும் பக்தர்களே, இந்த பணியை செய்யும் நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் இந்நிலைதான் நீடிக்கிறது. எனவே, சத்துணவு மையம், அங்கன்வாடி மையங்களுக்கு நியமனம் நடந்ததுபோல, அன்னதானம் நடக்கும் கோயில்களிலும் சமையலர், உதவியாளர்கள் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.