பரதீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை!
ADDED :4422 days ago
ஊத்துக்கோட்டை: பரதீஸ்வரர் கோவிலில், 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது.ஊத்துக்கோட்டை அடுத்த, தாராட்சி கிராமத்தில் உள்ளது லோகாம்பிகை சமேத பரதீஸ்வரர் கோவில். இக்கோவில் கடந்தாண்டு சீரமைக்கப்பட்டது. செவ்வாய், வெள்ளி, பிரதோஷ தினம் மற்றும் விசேஷ தினங்களில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி, அம்மனை தரிசனம் செய்வர். நேற்று முன்தினம், ஆடிப்பூர விழாவை ஒட்டி, இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதை ஒட்டி, காலை, கணபதி, பரதீஸ்வரர், லோகாம்பிகை தாயார் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை, உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், தொடர்ந்து, 108 சுமங்கலிகள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜையும் நடந்தன. இதில் சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை செய்யப்பட்டது.