ஸ்தலசயன பெருமாள் கோவில் சுற்றுச்சுவருக்கு ஒப்புதல்!
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயனப் பெருமாள் கோவில் வளாக சுற்றுச்சுவர் அமைக்க, 19.30 லட்சம் ரூபாய் நிதியை, அறநிலைய ஆணையம் ஒதுக்கிஉள்ளது. மாமல்லபுரம், ஸ்தலசயனப் பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. இந்துசமய அறநிலையத் துறை நிர்வகித்து வரும் இக்கோவில், நீண்ட காலமாக சுற்றுச்சுவர் இன்றி, சீர்கேடாக உள்ளது. கோவில் வளாகம், திறந்தவெளி கழிப்பறையாக மாறி, இயற்கை உபாதை கழிக்கின்றனர். அங்கு மது அருந்துகின்றனர். துர்நாற்றத்தால், பக்தர்கள் அருவெறுக்கின்றனர். இதுகுறித்து, கடந்த மாதம் 1ம் தேதி, ‘தினமலர்’ நாளிதழில், செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, உயரதிகாரிகளின் உத்தரவின்படி, கோவில் அருகில் உள்ள அர்ச்சுனன் தபசு சிற்பத்தை மறைக்காத வகையில், 3 அடி உயர அடித்தள சுவர், அதன்மேல் 4 அடி உயர தடுப்பு கம்பி அமைக்க முடிவெடுத்த கோவில் நிர்வாகம், இ ப்பணியை, 49.50 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள, ஆணையரிடம், திட்ட அறிக்கை அளித்தது. இதுகுறித்து பரிசீலித்த ஆணையகம், துறை பொறியாளர் மூலம், 19.30 லட்சம் ரூபாய்க்கு மதிப்பிட்டு, இத்தொகையை அளிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது.