உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துக்குமாரசாமி கோவில் விழா நாளை குண்டம் இறங்கும் பக்தர்கள்

முத்துக்குமாரசாமி கோவில் விழா நாளை குண்டம் இறங்கும் பக்தர்கள்

நாமக்கல்: வெண்ணந்தூர் முத்துகுமாரசாமி, செல்வ மாரியம்மன், பூபதி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, நாளை (ஆக., 13) குண்டம் இறங்கும் விழா கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் அடுத்த, வெண்ணந்தூரில் முத்துகுமாரசாமி, செல்வ மாரியம்மன், பூபதி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தாண்டு விழா, கடந்த, 29ம் தேதி செல்வ மாரியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஸ்வாமிக்கு பூ போடுதல், பூபதி மாரியம்மனுக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. அதையடுத்து, நேற்று வரை தினமும் ஸ்வாமிக்கு பூஜை செய்யப்பட்டது. நேற்று மதியம் 12 மணிக்கு ராஜகணபதிக்கு அபிஷேக ஆராதனையும், முத்துக்குமார ஸ்வாமி, பூபதி மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், நடந்தது. இரவு, 9 மணிக்கு சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, பூபதி மாரியம்மன் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7 மணிக்கு பூபதி மாரியம்மன், செல்வ மாரியம்மனுக்கு பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று செல்வ மாரியம்மன் தீர்த்தக்குட குழு சார்பில், அதிகாலை, 5 மணிக்கு, பவானி சென்று தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வருகின்றனர். மதியம், 2 மணிக்கு, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை அதிகாலை, 5 மணிக்கு அக்னி கரக ஊர்வலம் நடக்கிறது. அதை தொடர்ந்து, அதிகாலை, 5.30 மணிக்கு செல்வ மாரியம்மன் கோவிலில், பூ மிதித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டும் இறங்கி அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இரவு, 9 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆகஸ்ட், 14ம் தேதி காலை, 6 மணிக்கு முத்துகுமார ஸ்வாமி, செல்வ மாரியம்மன், பூபதி மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. காலை, 9 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு, 8 மணிக்கு, செல்வ மாரியம்மன், பூபதி மாரியம்மனுக்கு பூவோடு வைத்து, கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !