ஆடி உற்சவம்: படவேட்டம்மன் வீதியுலா!
ஆர்.கே.பேட்டை : ஆடி மாதம், நான்காம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, படவேட்டம்மன் கோவிலில், நேற்று முன்தினம், சிறப்பு உற்சவம் நடந்தது. அம்மன், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம், படவேட்டம்மன் கோவிலில், ஆடி ஐந்தாம் வாரம், நான்காம் செவ்வாய்க்கிழமையான நேற்று முன்தினம், சிறப்பு உற்சவம் நடந்தது. ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், அம்மனுக்கு, சிறப்பு உற்சவம் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமைகளில் சந்தனம், குங்குமம், பன்னீர், இளநீர் அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, 1,008 பால்குட அபிஷேகம், விளக்கு பூஜை நடத்தப்பட்டது.நேற்று முன்தினம், செவ்வாய்க்கிழமை, அம்மனுக்கு சிறப்பு உற்சவம் நடத்தப்பட்டது. இதையடுத்து, உற்சவர் அம்மன், மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.