சதுரகிரி மலையடிவாரத்தில் சித்தர் திருவிழா!
வத்திராயிருப்பு : சித்தர்கள் வாழ்ந்த சதுரகிரி மலையின் அடிவாரத்தில், சித்தர் பெருவிழா மாநாடு, பாட்டுச் சித்தரின் காவிய நூல்வெளியீட்டு விழா நடந்தது. ஏராளமான சாதுக்கள், ஞானபீட யோகிகள், மகான்கள் கலந்து கொண்டனர். சீர்காழி ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீடத்தின் 7 ம் ஆண்டு விழா , சித்தர் பெருவிழா , பாட்டுச் சித்தர் நூல் வெளியீட்டு விழா அடங்கிய சித்தர் மாநாடு, யாகபூஜைகளுடன் துவங்கின. இறை துதிப்பாடல் நிழ்ச்சியை தொடர்ந்து பாட்டுச் சித்தர் இயற்றிய ‘ஸ்ரீ காகபுசுண்டர்’ என்ற பெருநூல் காவியத்தின் 3 ம் பாகத்தின் நூல் வெளியிடப்பட்டது. இதை இசக்கி ஐயப்ப சுவாமிகள் வெளியிட, பக்தர்கள் பெற்றுக் கொண்டனர். அயப்பாக்கம் ஜெயக்குமார் எழுதிய ‘ஓரெழுத்து கவிதை’ என்ற நூலை பிரபல ஆன்மிக பேச்சாளர் சுகிசிவம் வெளியிட, எழுத்தாளர் கண்ணம்மாள் பகவதி பெற்றுக் கொண்டார். செங்கல்பட்டு சிவக்குமாரன் இயற்றிய ‘யோகஞானம்’ புத்தகத்தை ஜெயலட்சுமியம்மாள் வெளியிட்டார். பின்னர் சுகிசிவம் ஆன்மிக உரை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து புலவர் அறிவொளி தலைமையில் ‘சித்தர்கள் வலியுறுத்துவது வைத்தியமா, ஆன்மிகமா என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடந்தது. திருவெண்காடு வள்ளலார் மன்ற தலைவர் ஜெயராஜமூர்த்தி, டாக்டர் சரவணன், பேராசிரியர்கள் ராஜகணபதி, ராகவேந்திரா உட்பட அறிஞர்கள் பேசினர். மாலையில் பாட்டுச் சித்தரின் இசைப் பாமாலை நிகழ்ச்சி, மதுராந்தகம் சித்தர் திருக்கூட்டத்தாரின் சித்ரான்ன வழங்கலும் நடந்தது. தமிழகம் முழுவதிருந்தும் ஏராளமான சாதுக்கள், ஞானபீடங்களை சேர்ந்த யோகிகள், தர்ம மடங்களை சேர்ந்த மகான்கள் கலந்து கொண்டனர். வாசியோகி திருப்பதி நன்றி கூறினார்.