தேவி பாலியம்மன் தீ மிதி திருவிழா: பக்தர்கள் பரவசம்!
வில்லிவாக்கம்: வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் கோவிலில் நடந்த, தீ மிதி திருவிழாவில், ஏராளமானோர் பங்கேற்று, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். வில்லிவாக்கம், தேவி பாலியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா, கடந்த மாதம், 23 துவங்கி நேற்றுமுன்தினம் இரவுடன் முடிவடைந்தது. அதில், தக்க கரகம் காப்பு கட்டுதல், குமார மக்களுக்கு காப்பு கட்டுதல், அக்னி சட்டி ஊர்வலம், அலகு குத்துதல், அக்னி ஏற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடைபெற்றது. அதில், 1020 பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது, திருவேற்காடு பகுதியை சேர்ந்த, பாலசுப்ரமணியன், 52, என்ற பக்தர், தீ குண்டத்தில் தவறி விழுந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினர். தீ மிதி திருவிழா முடிந்த பின், அம்மன் வீதி உலா புறப்பாடு நடைபெற்று, திருவிழா முடிவடைந்தது.