உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2 ஆண்டுக்கு பின் தேரோட்டம்: கோனூர் கிராம மக்கள் மகிழ்ச்சி

2 ஆண்டுக்கு பின் தேரோட்டம்: கோனூர் கிராம மக்கள் மகிழ்ச்சி

மேட்டூர் :இரு ஆண்டுகளுக்கு பின்பு, கோனூர் சென்றாய பெருமாள் கோவில் தேரோட்டம், நேற்று மாலை நடந்தது. அதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.மேட்டூர் அடுத்த கோனூரில், சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், சுற்றுப்பகுதியை சேர்ந்த, 27 கிராம மக்கள் வழிபாடு செய்கின்றனர். கோவில் பூசாரி வேங்கடத்தை மாற்றி விட்டு, வேறு பூசாரி நியமிக்க, சுற்றுப்பகுதி கிராம மக்கள் விரும்பினர்.எனினும், வேங்கடம் பூசாரியாக நீடித்ததால், இரண்டு ஆண்டுகளாக கோவில் தேரோட்டம் நடக்கவில்லை. இரு வாரத்துக்கு முன்பு, கோவில் நிர்வாகத்தை, தங்கள் கட்டுப்பாட்டில், இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது. மேலும், பூசாரி வேங்கடத்தின் மீது, இரு வழக்கு பதிவு செய்யப்பட்டதால், அவரை சஸ்பென்ட் செய்து, ஜெயகுமார் என்பவரை, தற்காலிக பூசாரியாக நியமித்தது.அதனால், சில ஆண்டுகளாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு தேரோட்டத்தை நடத்த, பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று மாலை, சென்றாய பெருமாள் கோவில் தேர்பவனி துவங்கியது. தேரை, அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, எம்.எல்.ஏ., பார்த்திபன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.தேர், கோனூர், பொறையூர், சந்தைதானம்பட்டி, மோட்டூர், ஆண்டிக்கரை உள்பட, 27 கிராமங்களுக்கு சென்று, இரவு நிலையை சேர்ந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, கோவில் மற்றும் தேர் செல்லும் பகுதியில், 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஏற்பாடுகளை, தக்கார் ரமணிகாந்தன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !