ஸ்ரீரங்கம் கோவிலில் கவர்னர் ஸ்வாமி தரிசனம்
திருச்சி: தமிழக கவர்னர் ரோசையா, ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று மாலை ஸ்வாமி தரிசனம் செய்தார். திருச்சி அருகே ஸ்ரீரங்கம் புலிமண்டபம் சாலையில், தட்சிணா இந்திய ஆர்ய வைஸ்யா, வாசவி கன்னிகாபரமேஸ்வரி தர்ம பரிபாலண சமிதி சார்பில், முதியோர் இல்லம் கட்ட, கடந்த, 2012 ம் ஆண்டு ஜூலை மாதம், 5ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. முதியோர் இல்ல கட்டிட பணிகள் சமீபத்தில் முடிந்தது.இதையடுத்து, முதியோர் இல்லத்தை திறந்து வைக்க, நேற்று காலை, 11.40 மணிக்கு தமிழக கவர்னர் ரோசையா, சென்னையில் இருந்து, விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு, திருச்சி மாவட்ட கலெக்டர் (பொ) தர்ப்பகராஜ் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். பிறகு, மன்னார்புரத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு, ஓய்வு எடுக்க சென்ற கவர்னர் ரோசையா, மனைவி சிவலட்சுமியுடன், நேற்று மாலை, 4.40 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வடக்கு வாசல் பகுதிக்கு காரில் வந்தார். அவரை, ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ., ஜனனி சௌந்தர்யா, அறநிலையத் துறை இணை இயக்குனர் ஜெயராமன், தாசில்தார் காதர் மொய்தீன் ஆகியோர் வரவேற்றனர். பிறகு, கவர்னர் ரோசையாவுக்கு கோவில் குருக்கள் நந்து பட்டர், முரளி பட்டர் ஆகியோர், பூர்ண கும்ப மரியாதை அளித்தனர்.கோவிலில் ஸ்வாமி கும்பிட்ட கவர்னர் ரோசையா, 5.40 மணிக்கு, கோவிலில் இருந்து முதியோர் இல்ல திறப்பு விழாவுக்கு புறப்பட்டு சென்றார். கவர்னர் ரோசையா வருகையையொட்டி, ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.