பிளாஸ்டர் ஆப் பாரிசால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தடை!
திருப்பூர்: பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட, 613 வினாயகர் சிலைகளை விற்க, மாசு கட்டுப்பாடு வாரியம் தடை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நெருங்குவதால், சிலை வடிவமைப்பை முறைப்படுத்த வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. திருப்பூரில் அதிகாரிகள் குழு, திடீர் ஆய்வு மேற்கொண்டது. ரசாயன கலவையில் தயாரிக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்ட, 613 விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக இருந்தன. இவற்றை, விற்க அதிகாரிகள் தடை விதித்தனர். மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் மலையாண்டி கூறுகையில், ”பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும், ’சாக் பவுடர்’ கலவையால் தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்க, தடை விதிக்கப்பட்டு உள்ளது. சிலை தயாரித்தவர்களிடம் உறுதிமொழி கடிதம் பெறப்பட்டு உள்ளது. இரவில் விற்பனை நடக்க வாய்ப்புள்ளதால், சிலைகளை துணியால் மூடி வைக்கவும், போலீசார் கண்காணிக்கவும், மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது,” என்றார்.