உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் முடி காணிக்கைக்கு பல மணி நேரம் காத்திருப்பு!

திருமலையில் முடி காணிக்கைக்கு பல மணி நேரம் காத்திருப்பு!

திருப்பதி :திருமலையில், முடி திருத்துவோர் பற்றாக்குறை காரணமாக, முடி காணிக்கை செலுத்த, பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க, வார இறுதி நாட்களிலும், விசேஷ நாட்களிலும், பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். பக்தர்களில், பெரும்பாலானோர் தங்கள் தலைமுடியை, ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக, தலைமை முடி காணிக்கை செலுத்தும் இடம் மட்டுமின்றி, பக்தர்கள் தங்கும் வாடகை அறைகளின் அருகிலும், 18 முடி காணிக்கை செலுத்துமிடங்களை, தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.அங்கு, 350 முடிதிருத்துவோர், நிரந்தர ஊழியர்களாக உள்ளனர். ஒப்பந்த ஊழியர்களாக, 150க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். வார இறுதி நாட்களில், பக்தர்களின் வருகை அதிகம் இருப்பதால், முடி காணிக்கை செலுத்த, 5 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.இந்த நாட்களில், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், முடிகாணிக்கை செலுத்துவதற்கு மட்டுமின்றி, ஏழுமலையான் தரிசனத்திற்காகவும், லட்டு பிரசாதம் பெறவும், பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால், பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தேவஸ்தானம், கோவிலுக்குள், 3 அடுக்கு வரிசை மற்றும் ஆன்லைன் முன்பதிவு முறையை ஏற்படுத்தி, ஏழுமலையான் தரிசனத்தை சுலபமாக்கியது போல், முடி காணிக்கை செலுத்தும் முறையையும், எளிதாக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !