லட்சுமி கணபதி சிலை தானம்: வித்தியாச விநாயகர் சதுர்த்தி விழா!
பெரம்பூர் சீனிவாச ராகவன் தெருவில் உள்ள ஜெயா தோட்ட நண்பர்கள் குழுவினர், கடந்த 22 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் இவர்கள் ஸ்தாபிக்கும் விநாயகர் கற்சிலை பூஜிக்கப்பட்டு, பின்னர் கோவில்களுக்கு தானமாக கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து நண்பர் கள் குழுவைச் சேர்ந்த குமார், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கூறியதாவது: துவக்கத்தில் விநாயகர் படத்தை வைத்து வழிபட்டோம். பின் காகித விநாயகர் சிலையை வைத்து, பூஜை முடிந்ததும் கடலில் கரைத்தோம்.நான்காவது ஆண்டு முதல், விநாயகர் சிலையை கடலில் கரைப்பதில் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு, கற்சிலை விநாயகரை வைக்க ஆரம்பித்து, பின்னர் அதை தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு தானமாக கொடுக்கத் துவங்கினோம். இந்தாண்டு இரண்டரை அடி உயரம் கொண்ட லட்சுமி கணபதி சிலையை உருவாக்கி உள்ளோம். வரும், 29ம் தேதி முதல் அடுத்த மாதம் முதல் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பூஜைகள் நடைபெறும்.இந்தாண்டு காஞ்சிபுரத்தில் உள்ள நல்லூர் கிராம கோவிலுக்கு, லட்சுமி கணபதி சிலையை தானமாக கொடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.