சோமவார அமாவாசை: வனதேவதைக்கு யாகம்!
ஆர்.கே.பேட்டை : சோமவார அமாவாசையை ஒட்டி, நேற்று, வனதேவதைகளுக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. திங்கட்கிழமையில் வரும் அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகிறது. நேற்று, சோம வார அமாவாசையை ஒட்டி, பித்ரு நிவர்த்தி மற்றும் வனதேவதைகளுக்கு சிறப்பு பூஜை, யாகம் நடத்தப்பட்டது.பெரிய நாகபூண்டி நாகவள்ளி உடனுறை நாகேஸ்வர சுவாமி கோவில் காலை 9:00 பித்ரு நிவர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் நாகேஸ்வர சுவாமி, வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதேபோல், மரிக்குப்பம் நாகாத்தம்மன் கோவில் சோம வார அமாவாசை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாகாத்தம்மன் கோவில் வேப்ப மரத்தில், சோம வார அமாவாசையின் போது, வனதேவதைகள் எழுந்தருள்வதாக, கிரமாவாசிகள் நம்புகின்றனர். இதையடுத்து, நேற்று சிறப்பு யாகம் வளர்த்து, பூஜை நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், மாங்கல்யம் பிரசாதமாக வழங்கப்பட்டது.