ராமேஸ்வரம் ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான ஈஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. 2015ல் ராமேஸ்வரம் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், 5 கோடியில் கிழக்கு ராஜகோபுரம், மூன்றாம் பிரகாரம், சேதுபதி, கல்யாண, சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்தி விமானங்கள் மராமத்து செய்து, திருப்பணிகள் நடந்து வருகிறது. இதனையொட்டி திருக்கோயில் உபகோயிலான பத்திரகாளியம்மன், ஈஸ்வரி அம்மன், உஜ்ஜயினி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்திட, 13 லட்சத்தில் திருப்பணிகள் துவங்கியது. இதில், ஈஸ்வரி அம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் முதல்கால யாகசாலை பூஜை துவங்கி, நேற்று 2ம் கால யாகசால பூஜை முடிந்ததும், திருக்கோயில் குருக்கள் விஜயகுமார் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். பின் அம்மனுக்கு நடந்த மகா தீபாராதனையில் கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், தக்கார் குமரன்சேதுபதி, கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோயில் கண்காணிப்பாளர் ராஜாங்கம், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், அ.தி.மு.க., நகர் செயலாளர் பெருமாள், அ.தி.மு.க., நகர் அவை தலைவர் பிச்சை, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.