ஓணத்திற்காக சபரிமலை நடை திறப்பு!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஓண வார விழா இன்று தொடங்குகிறது. முதல்வர் உம்மன்சாண்டி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார். ஓண பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு சார்பில் ஓண வார விழா இன்று மாலை 6.30-க்கு திருவனந்தபுரம் நிஷாகந்தி ஆடிட்டோரியத்தில் தொடங்குகிறது. முதல்வர் உம்மன்சாண்டி குத்து விளக்கேற்றுகிறார். சபாநாயகர் கார்த்திகேயன் ஓணம் விழா அறிவிப்பை வெளியிட்டு பேசுவார். விழாவில் கவிஞர் ஒ.என்.வி. கறுப்பு, எழுத்தாளர் சுகதகுமாரி, கலாமண்டலம் கோபி ஆகியோர் கவுரவிக்கப்படுகின்றனர். வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளும் தொடக்கவிழாவில் இடம் பெறுகிறது. தொடர்ந்து 11-ம் தேதி வரை மாவட்டத்தில் 28 மையங்களில் அமைக்கப்படும் மேடைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இன்று நடக்கும் தொடக்க விழாவுக்கு முன்னதாக மாலை நான்கு மணிக்கு ஸ்போர்ட்ஸ் கவுன்சில் சார்பில் ஓண விளம்பர பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கனகக்குன்று அரண்மனைக்கு வந்து சேரும். தொடர்ந்து அமைச்சர் அனில்குமார் ஓணக்கொடியேற்றுவார். அமைச்சர் சிவகுமார் நகரின் மின்விளக்கு அலங்காரத்தை துவக்கி வைப்பார். 11-ம் தேதி வெள்ளையம்பலம் ஜங்ஷனில் இருந்து ஓண நிறைவு விழா பேரணி புறப்பட்டு கிழக்கு கோட்டை மேம்பாலத்தில் நிறைவு பெறும்.. இதில் கேரள அரசின் திட்டங்களை விவரிக்கும் அலங்கார ஊர்திகள் இடம் பெறும்.
சபரிமலை நடை திறப்பு: ஓண பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கிறது. இன்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் இல்லை. நாளை முதல் தினமும் நெய்யபிஷேகம், உதயாஸ்தமனபூஜை, படிபூஜை ஆகியவை நடக்கிறது. ஏழாம் தேதி ஓணவிருந்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.ஓண பூஜைகள் முடிந்து 9-ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.