ஏகாம்பரநாதர் கோவிலுக்கு ரூ.10 கோடியில் புதிய தங்க ரதம்!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தங்க ரதம் செய்யும் பணியை, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று துவக்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்ற கோவில்களில், ஏகாம்பரநாதர் கோவிலும் ஒன்று. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில், தங்க ரதம் செய்ய தீர்மானித்து அதற்கான பணி நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் மண்டபத்தில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்தார்.விஜயயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், இதில் கலந்து கொண்டார்.இந்த தங்க ரதம், 26 கிலோ தங்கத்தில், 21 அடி உயரமும்; 10 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். இதற்கு, நேற்று காலை, 6:00 மணிக்கு, தச்சு பூஜை நடந்தது.தற்போது, காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கும் தங்க ரதம் வர இருப்பதால், பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, இந்த அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறுகையில், இந்த பணி, அடுத்த ஆண்டுக்குள் முடியும். 15 பேர், இந்த பணியில் ஈடுபட உள்ளனர் என்றார்.