சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
திருத்தணி : சுந்தர விநாயகர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான சுந்தர விநாயகர் கோவில், கட்டி முடித்து, 100 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, நேற்று, மகா கும்பாபிஷேகம் கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி முன்னிலையில் நடந்தது.கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், வாஸ்து, கோ பூஜை, உட்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:40 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 10:00 மணிக்கு, மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், ஆட்சியர் வீரராகவ ராவ், அரக்கோணம் தொகுதி எம்.பி., அரி, நகர்மன்ற தலைவர் சவுந்தர்ராஜன், ஒன்றிய சேர்மன் ரவி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மாலை, 5:00 மணிக்கு உற்சவர் விநாயகர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராமர் கோவில் : திருத்தணி, தணிகை மீனாட்சி அம்மன் கோவிலின் துணை கோவிலான ஸ்ரீராமர் பஜனை கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு ராமர் திருவுருவப் படம் பிரதிஷ்டை நடந்தது. பின்னர், காலை 6:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு, ராமானுஜ பக்த சபாவின் பஜனை பாடல்கள் பாடப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.