பழநி வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!
பாலசமுத்திரம்: பழநி கோயில் உபகோயிலான, பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ விழாவில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. செப்.,3 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கி, செப்., 13 வரை ஆவணி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. தினமும் வரதராஜ பெருமாள் காலை 7 மணிக்கு சப்பரத்தில் வீதி உலா வருதல், இரவு 7 மணிக்கு, அனுமார், கருடர், குதிரை போன்ற வாகனங்களில் திருவுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்றிரவு, 7.55 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் வரதராஜப் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு பவளக்கால் சப்பரத்தில் பெருமாள் திருவுலா வந்தார். இன்று இரவு 7 மணிக்கு குதிரைவாகனத்தில் எழுந்தருளுகிறார். நாளை (செப்.,11ல்) காலை 8.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை பழநி கோயில் இணைஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா செய்துள்ளனர்.