உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகம்: கடற்கரை கதவு திறக்கப்படுமா?

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகம்: கடற்கரை கதவு திறக்கப்படுமா?

மாமல்லபுரம் : மாமல்லபுரம், கடற்கரை கோவில் வளாகம் - கடற்கரை நேரடி பாதை மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். மாமல்லபுரத்தில், கடற்கரை கோவில் முதன்மையான பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் இக்கோவிலை, தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. தற்போது பயணிகள் அதிகரித்து வரும் நிலையில், கோவில் வளாகம் - கடற்கரை இடையேயான நேரடி பாதை, நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. கோவில் வளாகம், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்க, அதற்கு அப்பால் உள்ள புல்வெளி பகுதி, மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழும கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் வளாகம் செல்ல, நுழைவுச்சீட்டு வழங்கும் மையம், கோவில் வளாகத்திலிருந்து 300 மீ., தொலைவில், புல்வெளி பகுதி நுழைவாயிலில் உள்ளது. இதையடுத்து, நுழைவுச்சீட்டு பெறுவோர் மட்டுமே, இவ்வழியே அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் வளாகம் சுற்றுலா பயணிகள், அங்கிருந்து, நேரடியாக கடற்கரை செல்ல புல்வெளி வளாகத்தில், இரு நுழைவாயில்கள் உள்ளன. இவ்வழியே, கடற்கரை பகுதி பயணிகள் உட்புகுவதை தவிர்க்க, அவை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. கோவிலுக்கு சென்றவர்கள், பிரதான நுழைவாயில் வந்து, புல்வெளி வளாகத்தின் வெளியே உள்ள, குறுகிய பாதையில் கடற்கரை செல்கின்றனர். கடைகள் ஆக்கிரமிப்பு, நெரிசல் உள்ள இப்பாதையில் செல்ல, அவர்கள் சிரமப்படுகின்றனர். கோவில் - கடற்கரை நேரடி பாதைக்கு வழிவகுக்க, இதுதொடர்பான துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !