கடத்தப்பட்ட.. நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் தமிழகம் வந்தன!
சென்னை : தமிழகத்தில் இருந்து, வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட, 12ம் நூற்றாண்டை சேர்ந்த, நடராஜர் மற்றும் அர்த்த நாரீஸ்வரர் சிலைகள், நேற்று, சென்னை வந்தன. கடந்த, 2002ம் ஆண்டு, அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமம், பிருகதீஸ்வரர் கோவிலில் இருந்த, நடராஜர் சிலை, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை, மாயமாகின.
சிலை கடத்தல் மன்னன், சுபாஷ் கபூர் மூலம், ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திற்கு அந்த சிலைகள் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. மத்திய, மாநில அரசுகள் மற்றும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோரின் தொடர் முயற்சியின் விளைவாக, சமீபத்தில் டில்லி வந்திருந்த ஆஸி., பிரதமர் டோனி அபோட், அந்த சிலைகளை, பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத் தார். அவற்றை, தமிழகம் கொண்டு வர, டி.எஸ்.பி., அசோக் நடராஜ் தலைமையில் குழு, மூன்று நாட்களுக்கு முன்பு, டில்லி புறப்பட்டு சென்றது. டில்லியில் இருந்து, பெங்களூரு வழியாக, விமானம் மூலம், இரண்டு சிலைகளும், நேற்று காலை, 11:50 மணிக்கு, ’ஏர்இந்தியா’ விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து சென்னை, கோட்டையில் உள்ள, இந்திய தொல்பொருள் துறை அலுவலகத்திற்கு, லாரியில் கொண்டு செல்லப்பட்டன. அங்கு, இரண்டு சிலைகளும், பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. வரும் 17ம் தேதி, அர்த்த நாரீஸ்வரர் சிலை, விருத்தாசலம் நீதிமன்றத்திலும், நடராஜர் சிலை, ஜெயங்கொண்டம் நீதிமன்றத்திலும், ஒப்படைக்கப்படும். அதன்பின், கடலூரில் உள்ள, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, சிலை பாதுகாப்பகத்தில், இரண்டு சிலைகளும், பாதுகாப்பாக வைக்கப்படும். இச்சிலைகள் இரண்டும், 12ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. இதன் பழம் பெருமையை சரியாக கணிக்க, ஓய்வு பெற்ற மத்திய தொல்பொருள் துறை அதிகாரி நாகசாமி அழைக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சிலைகள், மாயமான சிலைகள்தான், என்பதை உறுதி செய்ய, மத்திய தொல்பொருள் துறை, மண்டல அலுவலகத்தில் இருந்து, அதிகாரிகள் ஓரிரு நாளில், வர உள்ளனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுபாஷ்கபூர், வெளிநாட்டில் அருங்காட்சியகம் வைத்துள்ளார். அதில், இந்தியாவில் திருடு போன, நூற்றுக்கணக்கான சிலைகள் உள்ளன. அதேபோல், தமிழகத்தில் திருடு போன, கோவில் சிலைகள், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளன. அவற்றையும் தமிழகத்திற்கு, திரும்ப கொண்டு வர, நடவடிக்கை எடுத்து வருவதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., பிரதீப் பிலீப் தெரிவித்தார்.